சிறை சபலம். - விமல் குழந்தை வேலு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

சிறை சபலம். - விமல் குழந்தை வேலு

.                          சிறை சபலம்.

"""""""'''"""""""''''""""""""""""""""""""""""""""""""
விமல் குழந்தை வேலு

இருபதடி அகலம் ,தொண்ணூறடி நீளத்தில் பதினாறு கட்டிடங்களை கொண்டது எங்கள் சிறைச்சாலை.மூன்றடுக்கு கம்பி வேலி தடுப்புடனான ஒவ்வொரு கட்டிடத்துக்குள்ளும் இருநூறு பேர்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்தோம். 

இடநெருக்கம் , சுத்த குறைபாடு...  சொறி சிரங்கு சரும நோய் எங்களை இலகுவாக பற்றிக்கொள்ளும்.
அம்மை நோய் அமைதியான இரவில் வந்து எங்களை ஆட்கொண்டால் எப்படியும் ஒருவராவது காலையில் உடம்பெல்லாம் பொக்கழங்களோடே  எழுப்புவோம்.

காலி கடலெழுப்பும் இரைச்சலுக்கருகில் கட்டப்பட்ட அந்த கட்டிடங்கள் முதலில் நெசவு தொழில்சாலைக்கென்றுதான் கட்டப்பட்டதாம். 
ஒவ்வொரு கட்டிடத்துக்குள்ளும்  அடைக்கப்பட்டிருப்பவர்களின் பிரதேசத்தின் முன்னெழுத்துடன் இலக்கம் கொடுக்கப்படும். அதுதான் கைதி இலக்கம். எனது கைதி இலக்கம் B12/56.வார்ட் இலக்கம் 12.

சிறைச்சாலையின் முக வாசலில் ஆர்மி காரியாலயம். அதற்கு முன்னால் உள்ள மூன்று வார்டுகளில் முதலாம் இலக்க வார்ட் பெண்கள் வார்ட். இரண்டாம் இலக்க வார்ட அம்மாள் வார்ட். எங்களைப்போன்ற சந்தேகத்தின் பேரில் .. நேரடி பங்களிப்பில் என  கைதான இளம் பெண்பிள்ளைகள் அந்த வார்டில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இரண்டு கிழவிகளும் இருப்பதாகவும் கேள்வி.  

யாருக்கெல்லாம் அம்மை நோயின் அறிகுறிகள் தெரிகிறதோ அவர்களை இரண்டாம் வார்டுக்கு கொண்டு சேர்த்து விடுவார்கள் .அதனால் அது அம்மாள் வார்ட் ஆகிற்று.

பெண்கள் வார்ட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை...
விரும்பியவர்கள் ஆசைப்பட்டால்..  காரியாலயம் முன்னுள்ள குறோட்டன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். மற்றது விரும்பியவர்கள் அம்மை நோயென்று அம்மாள் வார்ட்டுக்கு வருபவர்களுக்கு உதவலாம்.  

இந்த செய்தி எல்லா வார்டுகளுக்கும் தெரியும். தன்னை எப்போது அம்மை  நோய் தொற்றிக்கோள்ளும் தான் எப்போது அம்மாள் வார்டுக்கு போவதென தவியாய் தவித்துக்கொண்டிருந்தான் என்னோடிருந்த திருமலையை சேர்ந்த  எனது வயதை ஒத்தவன். யாராவது அம்மை பொக்கழம் கண்டு அம்மாள் வார்டுக்கு போவதை கண்டால் பொறாமையோடு பெருமூச்சி விடுவான்.

ஒரு செய்தி ... அந்த அம்மாள் வார்டில்  பார்ப்பவரை ஈர்க்கும் அழகில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும்  அம்மை என்று போவர்களுக்கு அந்த பிள்ளைதான் அதிகம் உதவுவதாகவும் ..ஆனால் மிகவும் கண்டிப்பு காரி. அதிகம் யாருடனும் பேசமாட்டாள். அந்த பெண்கள் வார்டே அவளின் கொன்றோளில்தானாம் என்பதேல்லாம் போய்வந்தவர்களின் மூலம் கிடைத்த செய்தி. 

இவனுக்கு அந்த பெண்பிள்ளையை  பார்க்க வேண்டும் , அதற்கு தனக்கு எப்போது அம்மை வருமென்ற சிந்தனையே தினமும். ( அப்ப நாங்க 24 வயது வாலிபனுகளப்பா தவறாக நினைக்க வேண்டாம்)

இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தவனென்ற வகையில் நான் அறிந்த அல்லது என்னை பொறுத்தவரை சிங்களவர்களிடம் இரண்டு குணங்களை கண்டேன். 
ஒன்று அவர்கள் உணவுக்கு மதிப்பளிப்பவர்கள்.
இரண்டு அம்மாளுக்கு பயப்பிடுபவர்கள்.

ஒவ்வொரு நாள் காலை மாலை இரு வேளைகளில் எங்களை கணக்கிடுவார்கள்.
மாலையில் கணக்கிட்டு உள்ளே விட்டவர்களுள் காலையில் யாராவது குறைந்திருக்கிறார்களா என்ற கணக்கெடுப்பு ஒரு நாள் காலையில் ஒன்று  குறைகிறது  ஏன் என்று நம்பியார் (ஆமியின் பட்ட பெயர்)
கேட்டபோது நான் முக்காடோடு உள்ளேயிருந்து  ஏழும்பி உள்ளேனேன்பதாக கையை உயர்த்தி காட்டினேன். .. ஆம் எனக்கு அம்மை. 
உடனே கம்பி தடுப்பு ஒழுங்கைக்குள்ளால் என்னை வெளியில் எடுத்து கூட்டிக்கொண்டு போவதை கொடுத்து வைத்தவனடா நீ என்பது போல ஏக்கத்துடன் பார்த்தூக்கொண்டிருந்தான் திருமலை நண்பன்.

யாழ்ப்பாணம் . வவுனியா. மன்னார், மட்டுநகர் அம்பாறை , திருமலை என எல்லாப் பிரதேசத்து அம்மாள்களும் ஒரு கட்டிடத்துக்குள். 

 மாலையில். சூரனை அழிக்க வரும் வேலவன் போல வேப்பம் கிளைகளை கொண்டு வந்து இறக்குவார்கள் ஆர்மி காரர்கள். அந்த இரண்டு பாட்டிகளும் வேப்பிலை அரைத்து எங்களுக்கு பூசுவார்கள். பெண்பிள்ளைகள் வந்து எங்களின் படுக்கை விரிப்பினை கழுவி தருவதாக வாங்கி செல்வார்கள் . எங்களில் சற்று சுகமானவர்கள்  உடம்பெல்லாம் பொக்கழம் விழுந்து அகோரம் கண்டு துடிப்பவர்களின் உடம்பை வேப்பிலையால் தடவி விடுவோம்.

போய் மூன்றாம் நாளில் எனது பொக்கழங்கள் கொஞ்சம் தணிந்தது. கண்களை திறந்து பார்த்து மற்றவருடன் பேச முடிந்தது. பக்கத்து வார்ட் பெண்கள் தாய்போல, சகோதரிகள் போல எங்களை பராபரித்தார்கள். இருந்தும் அந்த  பெண் பிள்ளை மட்டும் எங்களோடு அநாவசியமாக பேசவே மாட்டாள்.  அது கொடுத்தாயா ?, இது செய்தாயா? என மற்ற பெண்களை ஏவுவதிலேயே கவனமாக இருந்தாள். எல்லாமே பின்னேரம் ஆறு மணி வரைதான்.

நான் வந்து ஐந்தாம் நாள் இன்னொரு அம்மாள்  குறூப் கொண்டுவரப்பட்டது. வந்தவர்களுள்  என் திருமலை சினேகிதனும் ஒருவன்.
பாவம் உண்மையிலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான்.  கண் மூடு படலத்தின் உள் பக்கமெல்லாம் அவனுக்கு கொப்பழங்கள். கண்ணே திறக்க முடியாமல் கஸ்டப்பட்டான். மல்லிகை பூவை தண்ணீரில் நனைத்து அவனின்  கண்களில் ஒற்றிவிடுவேன்.
இரவெல்லாம் அனுகுவான். உடம்பெல்லாம் எரிகிறதடா என்று அழுவான் .அந்த அழகான பெண்பிள்ளை வந்து அவனின் படுக்கை விரிப்பையும் வாங்கி  கழுவி கொண்டு வந்து கொடுத்தாள்.

பாட்டிகள் இருவரும் அவனில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். இல்ல மன.   யோசியாத மன.. தாயார் உன்னுல ஆசைப்பட்டுத்தானே வந்து குடி கொண்டிருக்கா. ஆசை தீர்ந்திட்டா தானாக  இறங்கிருவாள் மனே ... யோசியாதை மனே என பாட்டிகள்  தேற்றினார்கள்.

தொடர்ந்து நீராகாரம்தான் உட்கொண்டான்.. ஆறாம் நாள்தான் கண் திறந்தான். நான் சொன்ன்தானே மனே ... தாயார் இறங்கிருவாளென்று. சொன்ன பாட்டியிடம் ஏன்  பெத்தா பிடிபட்டாய் என்று கேட்டடான்.
நான் புலிக்கு பாதுகாப்பு குடுத்து வைச்சிருந்தனாமப்பா..... எண்ட வாசலால  பொடியனுகள் ஓடுனதும் குத்தமாடா மனே என்ற பாட்டியின் கதை கேட்டு சிரித்தான்.
நீ ஏன் பெத்தா வந்தாயென்று மற்ற கிழவியிடம் கதை கேட்டான். 
நான் குண்டு கடத்துனண்டா .. அதுவும் கச்சான் சாக்குக்குள்ள வைச்சி.

நான் விடுதலையாகி வந்து லண்டன் போய் கசகறணம் என்றொரு நாவல் எழுதுவேன் , அந்த நாவலின் கதாநாயகி இந்த பெத்தாவாகத்தான் இருப்பாளென்பதை   நான் அப்போது நினைத்து கூட பார்த்திருக்க வில்லை. 

 திருமலை நண்பனுக்கு இப்போது ஒரு பிடி சோறு தொண்டைக்குள் இறங்குமளவுக்கு சுகமாயிற்று.
பெண்பிள்ளைகள் வந்து போய் உதவிக்கொண்டிருந்தார்கள். இவன் கேட்டான் டேய் விமல்  இந்த புள்ளைகளுக்குள் யாரடா அந்த பெட்டை?

அந்த பிள்ளைய முந்தாநாள் இரவே கொழும்புக்கு மாற்றிட்டாங்களாம்டா..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages