சிறைக்குள் இணைந்த வடகிழக்கு.
================
விமல் குழந்தை வேலு
1986 கடைசியில் பூஸா சிறையிலிருந்த 150 பேர்கள் பலவத்தை தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம்.
எந்த வித பயங்கரவாத குற்றங்களிலும் ஈடுபடாத, சந்தர்ப்பம் வரும்போது எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் நாங்கள் என்பதால் பலவத்தை சிறை அதிகாரிகள் எங்களிடம் அதிக கண்டிப்பு காட்ட மாட்டார்கள்.
சிறை உயர் அதிகாரி கரீம் என்பவர் மிகவும் வயது குறைந்தவர் . பார்க்க நடிகர் சுமன் போலவே இருப்பார். எங்களை கைதிகள் போல்
பார்க்காமல் நண்பர்களைப்போல பழகுவார்.
சேனநாயக என்றொரு அதிகாரி.
பலவத்தை முகாமை சுற்றி பலா மரங்கள், நீரோடையென ரம்மியமாக இருக்கும். எங்களுக்கு அடிக்கடி சேனநாயக பலாப்பழங்கள் கொண்டு தருவார்.
சேனநாயக ஒரு கலைப்பிரியன் . நாடகங்கள் எழுதி நடித்திருப்பதாக சொல்லுவார். எங்களில் சிலரை கொண்டு ஒரு நாடகம் நடிப்பித்து முகாமுக்குள்ளேயே அரங்கேற்ற வேண்டுமென்றும் அவருக்கு ஆசை.
மலையகத்து கதை. தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு தமிழ் பெண் அங்குள்ள சிங்கள முதலாளி வர்க்கத்தினரால் எத்தனை நெருக்கடிகளுக்குள்ளாகிறாள் என்பதுதான் கதை . அந்த பெண் பாத்திரத்தில் என்னைத்தான் நடிக்க சொன்னார். கங்காணியாக மண்டூர் பிரகாஸ்.
நாங்கள் நாடகம் நடிக்க இருக்கும் செய்தியை ஒரு துண்டில் எழுதி வேறோர் முகாமில் இருக்கும் முல்லைத்தீவு கிளி அண்ணைக்கு அனுப்பினோம்.
கிளி அண்ணை யார் என்றே எங்களுக்கு தெரியாது . கண்டதுமில்லை. சிறைக்குள்ளும் இன்னோர் தலைமைக்கு கட்டுப்பட்டுத்தான் இருந்தோம் . உண்ணா விரதமோ , பகிஸ்கரிப்போ எதுவாக இருந்தாலும் அது கிளியண்ணையின் வழி நடத்தலிலேயே நடக்கும்.
கிளியண்ணையிடமிருந்து செய்தி வந்தது. நாங்கள் நாடகம் நடிக்கக் கூடாதென்று.
சேனநாயக்கவிடம் சொன்னோம். அவர் கோவிக்கவில்லை, உங்களுக்குள் திறமான பல்வேறுபட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள் . நீங்கள் நிச்சயம் வெளித்தெரிவீர்கள் என்றார். அவர் அன்று சொன்ன அந்த நாடகத்தை தமிழில் எழுதியது நான்தான். அது மலையகம் பற்றிய சிங்கள நாவலொன்றின் சுருக்கமென்றும் அவர் சொன்ன நினைவிருக்கிறது.
சிறைக்குள் எங்களுக்கு செய்தித்தாள்கள் தரப்படும். முக்கிய அரச செய்திகளெல்லாம் கறுப்பு மையிட்டு தணிக்கை செய்தே தரப்படும். தலைப்பு செய்திகளை விடுத்து உள் விரிவுச்செய்திகளுக்கு கறுப்படித்து வந்தால் தலைப்பு செய்திகளால் தலையை பிய்த்துக்கொண்டு திரிவோம் .
அப்படித்தான் ஒருநாள் செய்தி வந்தது .
வடக்கும் கிழக்கும்் இணைகிறதென்பதே தலைப்பு செய்தி.
உள் விரிவு செய்திக்கெல்லாம் கறுப்பு மை. கடுப்பாகி விட்டோம்.
கரீம் வந்த போது அந்த பேப்பரின் ஒரிஜினலை கேட்டு கெஞ்சினோம். போங்கடா என்று சிரித்து விட்டு போனவர் பின்னேரம் வந்த போது அந்த பேப்பரைக்கொண்டு வந்து தந்தார்.
எல்லோரும் கூடி பரபரப்புடன் பேப்பரைப் பிரித்து அந்த செய்தியை வாசித்தோம்.
செய்தி.
இணைகிறது வடக்கும் கிழக்கும்்.
வட மாகாணத்தை சேர்ந்த , விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளரான பொட்டு அம்மான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வத்சலா என்ற பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைகிறார். . . . . .
#எழுதிக்கொண்டிருக்கும் நாவலிலிருந்து #
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment