பேய்க்கதையொன்று.
====================
விமல் குழந்தை வேலு.
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் எங்கள் ஊரில் நிறைய பேய்கள் வாழ்ந்திருக்கிறது. நானும்கூட அறிந்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் பேய்கள் சர்வ சாதாரணமாக ஊருக்குள் உலாவும்.
நாவல்காடு ஆலமரத்தடி பேய்கள் இரவில் சமைத்துண்ணுவதைக் கண்டிருக்கிறார்கள்.
ஒரு பேயின் கால் கையை மறு பேய்முறித்து எரியும் அடுப்புக்குள் விறகாக புகுத்துமாம். ஒரு அண்டாவில் மண்டை ஓடெல்லாம் கொதித்து அவியுமாம். அதனாலதான் அந்த ஆலமரம் பேயாலை என்று கூட அழைக்கப்ட்டது.
எங்கள் ஊருக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடைப்பட்ட இடத்தில் பைத்தியத்துக்கு வைத்தியம் செய்யும் வெள்ளையன் வீட்டுக்கு முன்பாக ரோட்டோரம் நின்ற பெரிய ஆல மரம் ஒன்று இரவில் பயங்கரமாக நிற்கும். நடுச்சாமத்தில் போனால் இந்த ஆல மரத்தடியில் பல பேய்கள் கூடிப்பேசிக்கொண்டிருக்குமாம் , ஆட்களை கண்டதும் மரத்துக்குப்பின்னால் மறைந்து விடுமாம். வெள்ளையன் வைத்தியத்தில் சுகமாகாமால் இறந்து போனவர்களெல்லோருமே இந்த ஆலமரத்தில் பைத்திய பேய்களாக குடியிருந்ததாக கேள்வி.
இது போக சங்கிலியன், சுடலை , கொள்ளிவாயனென்ற பேர்களோட சில்லறைத்தனமான பேய்கள் கொஞ்சம் நடுச்சாமத்துல ஊருக்குள்ள உலா வருகுங்களாம் .
இரவெல்லாம் ஒரே சங்கிலிச்சத்தமும், சுறுட்டு நாத்தமுமென்று விடிய யாரும் சொன்னால் நேற்றிரவு சங்கிலியனும், சுடலையும் ஊருக்குள் வந்து போயிருக்கிறார்களென்று அர்த்தம் . எங்கள் வீட்டு வாழமரத்திலும் பேய் ஏறியதை எங்கள் ஆச்சி கண்டிருக்கிறா.
எங்கள் ஊரில் பலரை இரவு , பகலென்று பாராமல் பேய் கூட்டிப்போயிருக்கிறது.
திடகாத்திரமான இளம் ஆண்களை கன்னிப்பேய்கள் நள்ளிரவில் வந்து எழுப்பி கூட்டிச்சென்று அவர்களை வன்புணர்வுக்கு உள்ளாக்க முற்பட்ட போது தப்பி வந்த கூட்டமெல்லாம் இப்போது உயிரோடு இல்லை. ஒன்றிரண்டு பொல்லில் திரிகிறார்கள். ஆனாலும் பேய் வன்னியண்ட பேரன், பேய் முருகண்ட, பேய் கந்தண்ட பேத்தியென்று இவர்களின் வாரிசுகள் அழைக்கப்படுவதால் இவர்கள் பேய் நாயகர்களாக இன்னும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள. இந்த பேய் பு . .ட , பேய் பூனா என்ற சொற்களெல்லாம் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவைகளே.
சில கன்னிப்பெண்களையும் கூட எங்கள் ஊரில் பேய்கள் கூட்டிச் சென்றிருக்கிறது . இந்த வகையான பேய்கள் இவர்களை பகலில்தான் கூட்டி சென்றிருக்கிறது. கூட்டி சென்று ஒன்றும் செய்யாது ஊரின் ஒதுக்குப்புறமிருக்கும் நாவை மரமொன்றில் ஏத்தி வைத்து விட்டு வந்து விடுமாம். புள்ளைய காணயில்லையென்று தேடினால் புள்ளை நாவை மரத்தில் இருக்குமாம் . எப்படி வந்தாயென்று கேட்டால் பெப்பறப்பேயென்று முழிக்குமாம். இவர்களின் வாரிசுகளும் .
அண்மையில் பிள்ளைகளுடன் ஊர் போனபோது , பிள்ளைகள் பேய் பார்க்க ஆசைப்பட்டார்கள். காட்டவில்லையென்றால் அப்பன் பொய்காரனாகிவிடுவானேயென்று ஆச்சியிடம் கேட்டன். . இப்ப அதெல்லாம் எங்க போய்ச்சோ? எட்டுல தப்புலாயவது இருந்திட்டு வந்தாத்தான் உண்டு. எங்க மனிசர் பேயக்கூட வாழ உட்டாங்களோ?
என்று சொல்லி ஆச்சி கைய விரிச்சிட்டா.
எங்க போயிருக்கும் இந்த பேய்களெல்லாம்?
அதுகளும் எங்களப்போல அங்க இஞ்செண்டு குடிபோயிருக்குங்கள். அதுகளுக்கும் வாரிசுகள் இருக்கும்தானே. இல்லாமலோ இருக்கும். பேய்த்தனமான பல முகநூல் பதிவுகளை பார்க்கும்போது தெரியுதே இது பேய்களின் வாரிசுதானென்று.
ஏன் இப்போதுள்ள பணக்கார இலக்கிய ஆளுமைகள் சிலர் கூட வாரிசுகளாகவே இருக்கலாம். இல்லையென்றால் சக படைப்பாளியையே நீ ஒரு கூனல் புத்திக்காரனென்று சொல்லக்கூடிய பேய்ப்புத்தி இவர்களுக்கு எப்படி வரும்.
என்னையும் பேய் கொண்டுபோனகதையுண்டு
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment