தே(வே)சப்பற்று ...?
******************
தேசத்தை ஈடுவைத்து
தேர்தல் செலவை ஈடுசெய்கிறார்கள்
நாசமாய்ப் போனாலும்
நாடுபற்றிக் கவலையில்லை
மோசமானோர் எல்லாம்
முகமூடியோடு நாட்டில்
நாட்டை ஏலம்போட்டுவிட்டு
றோட்டில் பாலம் போடுகிறார்கள்
அந்நியனுக்கு மக்கள்
அடிமையானாலும் பரவாயில்லை
எண்ணிய தரகு
இருக்குமிடம் வந்தால் போதும்
நாட்டை கட்டடத்தால் நிரப்பி
வீட்டின் பெட்கத்தை நிரப்புகிறார்கள்
விழுக்காடு கிடைத்தால் போதும்
புழுக்காடாய் போனாலும் நாடு
அலாக்காக வந்தால் போதும்
அழுக்காகிப்போனாலும் நாடு
சட்டைப்பை நிரப்ப
சட்டத்தைக் காட்டி
முட்டையில் பிடுங்குவார்கள் அதிகாரிகள்
கால்கையைப்பிடித்து
கதிரைக்கு வந்தால்
கஷ்டத்தை மறந்திடுவர்
அரசியல்வாதிகள்
மொத்தமாக வாங்குகிறார்கள்
அரசியல் வாதிகள்
சில்லறையாக வாங்குகிறார்கள்
அதிகாரிகள்
மொத்தமோ சில்லறையோ
வர்த்தகம் வளைத்து நடக்கிறது
சபையில் நாளாந்தம்
சண்டை போட்டுக்கொண்டு
சனங்களின் வருமானத்தில்
குண்டைப் போடுகிறார்கள்
சபையில் அங்கே
கத்திக்கொண்டிருக்கிறார்கள்
சனங்கள் வீட்டில்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்
உயர்மன்றில் பணியாற்ற
உதிரிகளும் போகிறார்கள்
தாழ்தொழில் வழங்கக் கூட
தகுதிகள் பார்க்கிறார்கள்
அரசியல்வாதிக்கொரு திட்டம்
அதிகாரிகளுக்கொரு சட்டம்
அரச தொழில் பார்ப்பதற்கு
அறுபது வரையறை
பாராளுமன்றம் என்றால்
போகலாம் ஆயுள்வரை
அலுவலக ஊழியர்க்கு
அங்கம் கெட்டி சான்று வேண்டும்
நாடாளுமன்றம் செல்ல
நாடித் துடிப்பு போதும்
பச்சைத் துவேசத்தால்
பாராளச் செல்வோர்கள்
கச்சை கட்டிக் கொண்டு
கதைக்கிறார்கள் ஐக்கியம்பற்றி
பச்சையோர் நீலத்தோரையும்
நீலத்தோர் பச்சையோரையும்
சாதிக்க விடாமல்
சாடிக் கொண்டிருக்கிறார்கள்
எல்லாமே பம்மாத்து
நீ
இருக்காதே எதிர்பார்த்து
உன்காலில் நீ நின்று
உழைத்திடும் வழிபாரு
வழிபார்த்து நடந்தால்தான்
வாழலாம் பசிதீர்த்து
அருட்கவி
அக்கரையூர் அப்துல்குத்தூஸ்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment