உம்மம்மா - நிஸ்ரி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

உம்மம்மா - நிஸ்ரி

அட்டாளை நிஸ்ரி.
உம்மம்மா..

உம்மா என்றால் குறையாத இரக்கமென்று அர்த்தமாம் அந்த உம்மாவையே உலகத்துக்கு தந்தவர்தான் உம்மம்மா.

ஊசி மூக்கும் அதுல இருக்குற மூக்குத்தி போட்ட தடமும்,இன்டக்கி பூத்த பூ போல லேசான அந்த கையும் எனக்கு பிடித்தவை.
எனக்குத் தெரிந்து உம்மம்மா போல ஒரு பேரழகி உலகில் இன்னம் பிறக்கவேயில்லை.

உம்மம்மா சாச்சிட ஊட்டதான் இருந்தா நானும் அங்கதான் கூடயா இரிப்பன் அவக்கென்டு ஒரு தனி ரூம் இருந்துச்சி அதுல  ஒவ்வொரு சைஸ்லயும் பானை அடுக்கும்  பன்பாய் அசவும் இருந்துச்சி அந்த ரூம்ட நெலைல சாஞ்சிக்கி கால மத்த பக்கம் நீட்டி உம்மம்மா வெத்துலாக்கு  தொவக்கிறது பாக்க அழகா இரிக்கும்.

உம்மம்மாவ விரும்ப கனக்க காரணங்கள் இருந்துச்சி அவ டைம் தவறாம தொழுவா அதுக்கென்டு ஒரு சிவப்பு முஸல்லாவும் வெள்ள ஒயிலும் இரிக்கும்.சுபஹூ தொழுத கையோட பாக்கு மரத்துக்கெல்லாம் வாலி பட்டையால தண்ணி ஊத்துவா, கொஞ்ச நேரத்துல தண்ணி வாத்து பொன்னங்கனி தைலம் பூசி மணக்க மணக்க இரிப்பா மனிசி.

உம்மம்மா கடும் உசாரா வேலயெல்லாம் செய்வா  அந்நேரம் பாலத்தடிய  பெரிய கடைகள் இல்ல மொத்தமா சாமான் வாங்குற என்டா றகுமார்ர கடக்கித்தான் போகனும் அந்தப் பொறுப்பயும்  மனுசிதான் செய்வா அவக்கு கூட நானும் தொத்திக்குவன்.
போற வழியெல்லாம் பெராக்கு பாத்துக்கு "அதென்ன இதென்ன" என்டு  கேள்வி கேட்டுக்கே போவன் உம்மம்மாவும் எல்லா கேள்விக்கும் பதில் செல்லிக்கி கூட்டிக்கி போய் தும்பாய் முட்டாசும் வாங்கித் தருவா.

பன்னென்டு பதிமூனு வயசிலயே உம்மம்மா கல்யாணம் முடிச்சிட்டாவாம் அவக்கு பத்துப் புள்ளையல்." டார்லிங் இப்பயே இப்டி அழகா இரிக்கயே அந்நேரம் எப்டி இரிந்திருப்பாய்.? அந்தாள் கடும் வலைவ வலஞ்சானாளா?" உம்மாப்பா பற்றி கேட்கும் போதெல்லாம் உம்மம்மா சின்னப்புள்ள போல மொகத்த மறச்சி வெட்கப்படுவா உண்மக்கிம் அவ கொழந்தப் புள்ளதான். சோக்கா அவட மடில தலைய வெச்சி கத கேட்டா உம்மாப்பா பத்தி நெறய கத செல்லுவா. உம்மாப்பா முந்தி ஹாபர்ல வேல செஞ்சாராம், அவரு தனியா நின்டு எத்துனயோ ஏக்கர் காட்ட வெட்டுவாராம் என்டு செல்ற நேரமெல்லாம் உம்மம்மா பெருமைல சிரிப்பா உம்மாப்பா மௌத்தானத பத்தி கதக்கிற நேரமெல்லாம் 
உம்மம்மா கைய கண்ல பொத்தி அழுதுடுவா மனுசி.நான் உம்மாப்பாவ நேர்ல கண்டதேயில்ல ஆனா உம்மம்மாட கண்ல அவர நெறயத் தரம் கண்டிருக்கன்.

2007 வேல்ட் கப்தான் நானும் உம்மம்மாவும் சேந்து பாத்த கடைசி வேல்ட் கப்.என்னப் போல உம்மம்மாவும் ஸ்ரீலங்கா சப்போர்ட்டர்தான் ஆனா அவக்கு இந்த மொட்டயன்  சனத், இதான்  மஹில இவன்தான் முரளி....என்டு  ஒவ்வொருத்தனா நான்தான் சொல்லி கொடுக்கனும்.
பழய ஞாபகத்துல ஒருநாள் கேட்டா "அந்த பொம்புள போல முடி வளத்தவன் எங்க" என்டு. சங்கக்காரயத்தான் அப்டி கேட்டா மனுசி.

ஸ்ரீலங்கா வின் பண்ற நேரமெல்லாம் உம்மம்மாவ கட்டிபுடிச்சி கத்துவன்.
ஓம் முதன்முதலா காதலிச்சது உம்மம்மாவத்தான். அவட நெத்தில கொஞ்சினா  தொழுக தடம்தான் உதட்ல தட்டுப்படும்."சீ உனக்கு வேற வேல இல்ல" என்டு செல்லாம கோவிப்பா சீதேவி....

கள்ளத் தீன் தட்டுப்பாடு வார நேரமெல்லாம் உம்ம்மாட பான அடுக்குல தேடுதல போட்டா வாரப்பம்,அரிசி மா பனியாரம்,சோவி,சீனி மாவு... என்டு ஏதாவது ஒன்டு தட்டுப்படும். பழை சோத்த காயவெச்சி அத இடிச்சி மாவாக்கி சுட்டுத்தார மங்கு  ரொட்டி ரெண்டு நாளைக்கி நாக்குல நிக்கிம். மங்கு  ரொட்டிய பெசஞ்சி சீனி போட்டு புடிச்சித் தருவா அத திண்டா அடுத்த நாளக்கிம் பசிக்காது.

ஏ.எல் நேரம் முழிச்சிருந்து படிக்கக்குள்ள இஞ்சி போட்டு பிளேன்டி ஊத்தி தருவா சுபஹூக்கு வந்து எழுப்பியும் விடுவா.
ஏ.எல் செகன்ட் இயர் படிக்கிற நேரம் உம்மம்மாக்கு திடீரென்டு சுகமில்லாம பெய்த்து கட்டிலோட மனிசி படுத்த படுக்கயா ஆகிட்டா
பூப்போல இருந்த த மொகம் வாடிப்போய் அதுக்கு பொறவு கொசுவம் எடுத்து கலர் கலரா ஒயில் உடுத்த உம்மம்மாவ காண ஏலாமயும் பெய்த்து.

மகாராணி போல சிரிச்சிக்கிட்டே இருந்தவ வதங்கிப்போய் படுத்தத பாக்க மனம் கெடந்து பத்தும். உம்மம்மாக்கு வருத்தம் ஒரத்த நேரத்துல பொடவ உடுக்க ஏலாம போனதும் சீத்தையால சட்ட தச்சி உடுப்பாட்ட பாத்த நேரம் கை எல்லாம் வெளில தெரியும் என்டு  மரம சரம என்டு போடாம விட்டா.அந்தளவு பக்குவமானவர் உம்மம்மா. சுகமில்லாத நேரத்துலயும் அவவ கட்டிப்புடிச்சி "லவ் யூ டாலிங் ஒனக்கு ஒன்டும் ஆகாது" என்டு செல்ற நேரமும் வெக்கத்துல சிரிச்சா ஆனா அவ்வவாள பேச ஏலா பெய்த்து.

ஒருநாள் கிளாஸூக்கு போறத்துக்கு வெளியாகுறன் உம்மா ஓடியந்து சென்னா "உம்மம்மாக்கு சீவன் பெய்த்து" என்டு அந்த நிமிசத்த எப்டி கடந்தன் என்டு எனக்கே தெரில.
போய் பாக்கன் உம்மம்மா இளவரசி போல சிரிச்ச மொகமா இருக்கா ஆனா எல்லாரும் அவவ மையத்து என்டு சென்னாங்க 
கடசியா நானும் சேந்துதான் உம்மம்மாவ தூக்கிட்டு போய் அடக்கினம்.

உம்மம்மா இல்லாத சாச்சிட ஊட்ட போகயே விருப்பமே இல்ல கிறுகுற பக்கமெல்லாம் அவதான் நின்டா "டேய் மன,தம்பி" எங்குற சத்தம் கேட்டுக்கே இருந்துச்சி அவட வெத்துலாக்கு ஒரல், தொழுற பாய்,பொக தண்ணி வெக்கிற முட்டி எல்லாத்துலயும் உம்மம்மாட அழகு மொகம் கண்ணுக்குள்ள வந்துக்குட்டே இரிக்கிம் அவட பொட்டிய தொறந்து பொடவய புடிச்சிக்கி அழக்குள்ள கண்ண தொறச்சி உட உம்மம்மா இல்லாம பெய்த்தா. 

இன்டக்கி சம்பளமும் எடுக்கன் அந்த சம்பளத்துல ஒரு ஒயில் வாங்கி " டாலிங் இது ஒனக்குத்தான்" என்டு குடுக்க, 
லீவுல போற நேரமெல்லாம் "தல கடிக்குது பேன் பாக்க மாட்டியா?" என்டு கொஞ்சுறத்துக்கும் உம்மம்மா என்னோட இல்ல..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages