அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளன். தொடர் 17... - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 4 November 2018

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளன். தொடர் 17...

அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளன்.
தொடர்_17...

கிசாம்பிளி இலையுடன் ஒரு சிறுமியின் இரவுக் காவல்....

சிறுமியின் பெயர் பலீலா உம்மா, இப்ராலெப்பையின் எட்டாவது மகள். 
இந்த இப்ராலெப்பை ஒரு ஆயுல்வேதிக் வைத்தியர். இவருடைய தந்தையும் பிரபலமான வைத்தியர் முஹைதீன் பிச்சை. காலப்போக்கில் அது திரிவடைந்து பிச்சைப் பரிசாரி என்று அழைக்கப்பட்டார்.
பிச்சைப் பரிசாரி என்றால் கிழக்கில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.

இவருடைய மகன் இப்ராலெப்பையும் அதே அளவுக்கு பிரபலமடைந்திருந்தார். ஏன் விடுமுறை எடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு வைத்தியச் சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு அரசால் அங்கீகாரம் பெற்ற ஆயுல்வேதிக் வைத்தியர் இவர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை என்று இவரின் உறவுகளும் நட்புகளும் பரந்து காணப்பட்டாலும்.அதேபோலத்தான் இவருடைய சொத்துகளும் பரந்து காணப்பட்டது. 
கொஞ்சம் கோபக்காரன், பொய் சொல்லமாட்டார், காரசாரமாகப் பேசக்கூடியவர், அரசியலில் இவருடைய ஆதரவு முஸ்தபா mbக்கே என்று எல்லோருக்கும் தெரியும்... பகிரங்கமாக தனது ஆதரவை முஸ்தபாmbக்குத் தெரிவித்து பலரின் எதிர்ப்புகளை அந்தக்காலத்தில் சம்பாதித்திருந்தார் இந்த இப்ராலெப்பை வைத்தியர்.

இவருக்கு எட்டு பெண் குழந்தைகளும், கடைசியில் ஒரு ஆண் குழந்தையும் அனைத்துப் பிள்ளைகளும் இவரைப் போலவே குணத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும் அதே போலவே கல்வியும் கற்றிருந்தனர்.

இவருடைய வளர்ப்பு முறை கடினமாக இருந்ததாலோ இன்றும் பிச்சைப் பரிசாரியின் பரம்பரை என்றால்  ஒரு தனி மரியாதை இருப்பது போல பயமும் இருக்கிறது.
யார் எது பேசினாலும் உடன் காரமான பதில் சொல்லக்கூடியவர்கள்,
கொடுக்கல் வாங்கல்களில் நேர்மையானவர்கள், மற்றவர்களுடன் கண்ணியமாகப் பழகக் கூடியவர்கள், தனக்கு பிடிக்காத இடத்திலும், தனக்கு பிடிக்காதவர் இருக்கும் இடத்திலும் இருக்கமாட்டார்கள்.
வாக்குத் தவறாதவர்கள், நாக்குப் பிரட்டாதவர்கள், தனக்கு யாரும் ஏதாவது செய்து மனது வலித்தால் அதை விடக் கடினமான வலியை நான்கு ஐந்து சொற்கள் பேசியே அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

இத்தனை குணங்களும் கொண்டவள்தான் பலிலா உம்மாவும்.

பாடசாலையில் கெட்டிக்காறி ஆனாலும் தரம் ஒன்பதாம் ஆண்டுவரைதான் அவளால் கல்விகற்ற முடிந்தது.
அட்டாளைச்சேனை அல் முணிறாவில் கல்வி கற்ற இவர் தரம் ஏழு படிக்கும்போது வட்டாரப் பரிட்சையில் இரண்டாம் இடம் பெற்றார்.
இருந்தும்
ஒருவர் படித்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் இருந்த பெற்றோர் ஒரு மகளை ஆசிரியர் ஆக்கிவிட்டு மற்றப்பிள்ளைகளை எட்டாம் ஆண்டு, ஒன்பதாம் ஆண்டு பத்தாம் ஆண்டுகளோடு நிறுத்தி திருமணம் முடித்துக்கொடுத்துவிட்டார்கள்.

அந்தக்காலத்தில் வீட்டுத் தொழிலாக வீடி சுத்துதல், பயிர் செய்தல், கிடுகிளைத்தல், ஆடை தெய்த்தல் என்று சில கைத்தொழில்களைச் செய்வார்கள். எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் இந்தப் பலீலா உம்மாவின் ஆர்வம் இவை அனைத்தையும் கற்றுக்கொள்ள வைத்தது. 

தனது ஒன்பது வயதில் வீடி சுத்த ஆரம்பித்த இவர் பாடசாலைக்குச் செல்லும் போது சமையலுக்கான சில வேலைகளை முடித்துவிட்டுச் சென்றாலும் வீடு திரும்புவதற்குள் உம்மா இலைகளை நனைத்து வைத்திருப்பார். பாடசாலை முடிந்து வந்தவர் பகல் உணவைத் தொடர்ந்து வீடி சுத்த ஆரம்பித்துவிடுவார்.

இப்படி தொழில் செய்து வரும் பணத்தைச் சேர்த்து முன்னூறு ரூபாய் கொடுத்து ஒரு பாவித்த தெய்யல் மிசின் வாங்கி தானே தெய்யல் வேலையையும் கற்றுக்கொண்டார். 
ஆடை தெய்த்தல், படங்கு தெய்த்தல் என்று செய்யும் வேலைகள் மூலம் வரும் வருமானத்தைக் காட்டியதாலும், கொஞ்சம் துடிதுடிப்பான பிள்ளை என்பதாலும் தனது சொந்த வயலுக்கு இந்த மகளையே வாப்பா வேலைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். 

இலுக்குச் சேனையின் கழவட்டி பிரதேசம் ஆங்காங்கே காடுகளும் சில மலைகளும் நிறைந்து பிணைந்த வயல் பிரதேசம்.
அதில் இப்ராலெப்பைக்கு ஒன்பது ஏக்கர் வயல்க்காணி இருந்தது . உளவும் நேரம், விதைக்கும் நேரம், அறுவடை நேரம், சூடு அடிக்கும் நேரம், குரிவி துரத்துதல், பகல் காவல் என்று வயலில் உள்ள அனைத்து வேலைகளையும் இந்த பத்து வயது பலிலா உம்மாவை வைத்தே தகப்பன் செய்துவந்தார்.
இந்தக் காலத்தில் பல கசப்பான சம்பவங்கள் இருந்தாலும் ஒரு சிலதை மட்டுமே இவர் அடிக்கடி நினைவு கூறிக்கொண்டு அழுவதும், யோசிப்பதும் மட்டுமில்லாமல் தீராத தலையிடி ஆஸ்துமா போன்ற நோய்களும் இவரைத் தழுவிக் கொண்டது.

ஒருநாள் பயளைகளை வாப்பா தலையில் ஏத்திவிட சுமந்துகொண்டு வரம்புகளில் போட்டுவிட்டு திரும்பி வந்து மீண்டும் பயளையைத் தலையில் வைக்கும்போது மூக்கால் இரத்தம் வந்ததைக் கண்ட பலிலா உம்மா வாப்பாவிடம் சொல்ல அது உஸ்னத்துக்கு ரெத்தம் வாரான் தொடச்சிட்டு வேலையப்பார் என்று சொல்ல.
உச்சி வெயிலில் தனது சொந்த வயலிலேயே வேலைக்காறியானாள் இந்தப் பலிலா உம்மா.

இன்னொருனாள் முஸ்தபா mb தேர்தல் கேட்கும் நெரமது. காலையில் குருவி விரசுவதர்க்கு தனது துவிச்சக்கர வண்டியில் மகளை ஏத்திச் சென்று இறக்கிவிட்டு விரசிக்கு இரு மகள் நான் வோட்டப் போட்டிட்டு வாரன் என்று போன வாப்பா இல்லை வரவே இல்லை.

காலை பதினொரு மணியாகிறது காலைச்சாப்பாடும் இல்லை வாப்பாவும் வரவில்லை, 
பகல் இரண்டு மணியாகிறது பகல்ச் சாப்பாடும் இல்லை வாப்பாவும் வரவில்லை, மகரியாகிறது, இஷாவும் முடிகிறது வாப்பா வரவில்லை.
வயலின் ஓரத்தில் கட்டியிருந்த பொரையின் மேல் பயத்தில் ஒடுங்கிப்போய் இருந்த பலீலா உம்மா மெல்ல நகர்ந்தாள் மலை ஒன்றிற்கு.

அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டவள்.
எப்போது பாம்பு வரும், எதற்குள்ளால் பூரான் வரும். இல்லை பேய் வருமா...? இன்னா ஊளை இடுவது பேயா இல்லை நாயா...? யானை வந்தால் நான் என்ன செய்வது...? புலி கரடிகள் வரக்கூடுமோ என்று அந்த பத்து வயதுச் சிறுமி பயத்தோடும், பசியோடும், குளிர் நடுக்கத்தோடும் பக்கத்தில் இருந்த கிசாம்பிளி மரத்தின் இலைகளைப் பிய்த்து சப்பிக்கொண்டு.
 பாதம் மலையில் பட காலை மடித்து இரண்டு முடங்கால்களிலும் தலையைவைத்து அழுதுகொண்டே இருக்கும்போது பொழுது பொலுபொலுத்து விடிகிறது வாப்பா வருகிறாரா என்று மலையில் எழுந்து நின்று சுற்றிப் பார்தபோது வருகிறாராம்.

வாப்பாவைக் கண்ட போது தூரத்தில் வதை பட்ட அவள் உயிர் மீண்டும் உடலுக்குள் நுழையப் புதிதாய்ப் பிறந்ததாய் உணர்கிறாள்.

வந்த வாப்பா மகள் நான் முஸ்தபாmbக்குத்தான் வாக்குப் போட்ட எனக்கு அடிக்க கொஞ்சப் பேர் ரோட்டல்லாம் தேடிக்கி இருந்தானுகள், உம்மாவும் கடுமையா பயந்து பெய்த்தா அத்தான் வரல்ல மகள். சரி ஒனக்குப் பசிக்கும் என இன்னா....
என்று பனிஸைக் கொடுக்கும்போது திரும்பி வயலைப் பார்த்தவர் இஞ்சப்பார் இந்த ஏரியா எல்லாம் குருவி திண்டிருக்கு நெல்ல.
நீ ஒழுங்காப் பாக்கல்ல ஒனக்கு பனிஸ் இல்லை என்று பறித்து அவரே உண்டுவிட்டு வீட்ட கொண்டு போய் விட்டாலும். இவள் திருமணம் முடிக்கும்வரை முறிவு கட்டுதல் வரம்பு கட்டுதல் என்று வயல் வேலைக்காறிப் பணி இவளை விடவேயில்லை.

மனம் பத்தி எரியாத நாளே இல்லை பத்தொன்பது வயதானது. குடும்ப உறவுகளில் முறை மாப்பிள்ளைகள் பலர் பெண் கேட்டு வந்தாலும், வேறு பல உத்தியோகத்தர்கள் வந்தாலும் யாருக்கும் முடித்துக் கொடுக்காமல் ஒரு ஏழை மீனவனுக்கே இவளை மணமுடித்துக் கொடுத்தார் தந்தை....

தன் மற்றப் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடுகளும் காணிகளும் கொடுத்து மணமுடித்து வைத்து பின் மிகுதியாக இருந்த இரண்டு ஏக்கர் வயல் காணியை இப்ராலெப்பையின் மறைவுக்குப் பின் வித்து சில பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் இவளுக்கு எதுவும் இல்லை மீனவனின் பொண்டாட்டிக்கு எதுக்கு என்று ஈக்கு வாரவக்கட்டு ஈக்கில்களே இவளை நோக்கி வந்தது.

இரவு பகலாகக் கணவன் ஆத்திலும் குழத்திலும் வீசி மீன் பிடித்து வித்து பிள்ளைகளை வளர்த்தாலும். அவர்களின் கல்விக்கும் திருமணத்திற்கும் இவளின் உழைப்பும்தான் அவசியமாக இருந்தது.

ஆக்கின சோத்துக்கு கறியில்லாத நிலையிலும் யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ குழந்தைகளை மாற்றி கரையேற்றி இன்று தனது ஐந்தாவது மகனின் மனைவியை தனது குழந்தையாக நினைத்து அரவணைத்து வாழும் இவரின் வாழ்க்கையில்.
 கணவன் மனைவிக்கிடையில் அப்பப்போ வரும் பிரச்சினைகள் பெரிதாகி இந்த ஐந்தாவது ஆண் குழந்தையின் பத்து வயதில் தலாக் செய்து கொண்டார்கள்..

பின் என்ன மிகுதிக்காலம் கணவனிடம் தாவரிப்புச் செலவோ பிள்ளைச் செலவோ வாங்காமல் ஒற்றையாகவே கரை சேர்த்தாள் இந்த பலீலா உம்மா.மூத்த மகனின் உழைப்பும் உறுதுணையாக இருந்தது. 

இப்படி தனது கடந்தகால கசப்பான சம்பவங்களை உணர்வுரீதியாக அந்த ஐந்தாவது மகனான என்னோடு பகிரும் போது என் இதயத்தை இரும்பு முட் கம்பிகளால் சுற்றி சுத்தியலால் அடிப்பது போலவே வலிக்கும்.
அதிலும் அந்த இரவுக் காவலைப் பற்றிச் சொல்லும்போது இவர் தந்தை இப்ராலெப்பை உயிருடன் இல்லை இருந்திருந்தால் அந்த நொடிதான் அவரின் மரணமாக இருந்திருக்கும்.

நான் சிலகாலம் தாயுடனும் சிலகாலம் எனது ராத்தாவின் வீட்டில் இருக்கும் தந்தையுடனும் வாழ்ந்து இன்று இருவரும் இல்லாமல் ஜப்பானில் தனிமையில் வாழ்ந்தாலும் என் தாய்ப்பாச ஏக்கங்கள் என் தாயைச் சுற்றியே அலைகிறது இன்ஷா அல்லாஹ் எங்கள் இருவரில் ஒருவரின் மறணம்வரை அந்த மடியில் படுத்துறங்க ஏங்கும் பிள்ளையாக வாழும் எனது.
அன்று நான் ஒரு கட்சியின் வேட்பாளன் தொடரில் என் தாயின் சில நினைவுக் குறிப்புகளைக் கூறிய மகிழ்ச்சியில் மீண்டும் மாநகர சபைப் பக்கம் போய்வரலாம் என்று நினைக்கிறேன்....
வாருங்கள்....
#தொடரும்..Gafrufais

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages