இனியநாள் தூரமில்லை....
******************************
தாயுன்னை மொழி பெயர்க்க
தாரணியில் பாஷையில்லை
உன்னுடைய தியாகத்தை
உணர்த்துதற்கு வார்த்தை இல்லை
இன்னும் உன்....
அன்பை அளந்து சொல்ல
அளவுகோல் உலகில்இல்லை
கொட்டும் மழையினிலும்
கொடூர வெயிலினிலும்
ஒற்றை மரமாயிருந்து
உயிர் தந்தாய் நீ எனக்கு
தாயே நீ,
பட்ட துயர்களுக்கு
பரிசுவெகு தூரம் இல்லை
சேய் எனக்கு இப்போது
சிறகு முளைத்தது கேள்!
பிறக்கையிலே அனுபவித்த
பெருவலியின் துளிதுடைக்க
இறக்கும் வரை உனையென்
இறக்கையால் நான் சுமப்பேன்
நீ
சிரிக்கின்ற நாளும்
சீக்கிரம் உன்காலடியில்
வயிற்றில் நெருப்போடும்
வதனத்தில் நீரோடும்
பொறுப்பைச் சுமந்து கொண்டு
பூமியில் புகைந்தவளே,
உன்
பாரம் குறைந்துனது
பாதங்கள் இளைப்பாறி
நாவும் ருசிசேர்க்கும்
நாளும் இனி தூரம் இல்லை
தாயே நீ ....
நகையோடு அடகு வைத்த
தொகையான மகிழ்வுகளை
மீட்டெடுக்கும் நன்நாள்
மிகத் தொலைவில் இல்லையில்லை
வயிற்றில் வரட்சியோடும்
வாழ்க்கையில் வெருட்சியோடும்
நெருப்பில் நடந்தவளே,
செருப்புனக்கு தங்கத்தில்
செய்யும்நாள் சேய்மையில்லை
உன்
வாழ்க்கைப் புத்தகத்தில்
வறுமை வரைந்த கீறல்கள்
அஜந்தா ஓவியமாய்
அலங்காரம் பெறும்நாள்
நெடுந் தூரமில்லை
நிஜமாய் உன் அருகில்தான்
உன்
வேர்வையில் விளைந்த உப்பெல்லாம்
வைரமாய் மாறியுந்தன்
வாசற்படி தேடிவரும்
வாசநாள் தூரமில்லை
உன்
கண்ணீருக்கான
கடன் தீர்க்கும் பொன் நாள்
அன்னையே கேள்
அதிக தொலைவிலில்லை
உனைக் கட்டிப்போட்டிருக்கும்
பட்டினிக் கயிற்றை
வெட்டி எறிந்துனக்கு
விடுதலை கொடுக்கும் நாள்
எட்டிய தொலைவில்தான்!
இனியுமது தூரமில்லை
புத்தாடை வாடையையே
புசிக்காத தாயுனக்கு
பொன்னாடை போற்றி
புகழ்மாலை சூட்டும் நாள்
முன்னாடி வருகிறது
நீ
அடைகாத்து வைத்த
ஆசைகள் அத்தனைக்கும்
விடைகாணப் போகும் நாள்
வெகு தூரம் தானில்லை
தடையெல்லாம் உடைத்துன்னை
நடைபோட நான் பாச
குடையோடு வரும்நாளும்
கூடிய தொலைவிலில்லை
அருட்கவி
அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment